மயக்க மருந்து ஸ்பிரே அடித்து பெண்ணிடமிருந்து மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பத்தலப்பள்ளி பகுதியில் ராமலிங்கம்-மஞ்சு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மஞ்சு தான் நடத்தி வரும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கடையில் கண்ணாடி பொருட்களை வாங்கியுள்ளனர். இதனையடுத்து தங்களிடம் போதிய பணம் இல்லாததால் ஏ.டி.எம் மையத்திற்கு சென்று பணம் எடுத்து வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
அதன் பின் மீண்டும் கடைக்கு வந்த வாலிபர்கள் மஞ்சுவின் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடித்து அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து மஞ்சு அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.