நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறையை தலைமை இடமாக கொண்டு கடந்த ஆண்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. வரலாற்று மற்றும் ஆன்மிக சான்றுகளும், சைவ மற்றும் வைணவ ஆலயங்களும் நிறைந்த பகுதி மயிலாடுதுறை தொகுதி ஆகும். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எனப்படும் எம். கே. தியாகராஜ பாகவதர் பிறந்த ஊர் இதுவாகும். பொன்னியின் செல்வன் தந்த கல்கி, மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆகியோர் வாழ்ந்த ஊர்.
மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியை அதிகபட்சமாக திமுக 6 முறை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 4 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சை, தமிழ் மாநில காங்கிரஸ், தேமுதிக, பாஜக தல 1 முறை தொகுதியை வென்றுள்ளது. தற்போதய எம்.எல்.ஏ அதிமுகவின் வி. ராதாகிருஷ்ணன். மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,45,022 ஆகும். மயிலாடுதுறை தொகுதியில் புதிய பேருந்து நிலையம், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி ஆகியவை நீண்டகாலமாக கோரிக்கைகளாகவே உள்ளன.
1987ம் ஆண்டு எம்ஜிஆர் தொடங்கிய தலைஞாயிறு MPKRR கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 2017ஆம் ஆண்டு மூடப்பட்டதால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். நெல்-ஐ பாதுகாப்பாக சேமிக்க கிடங்குகளை உருவாக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். மயிலாடுதுறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்கியதை தவிர வேறு எந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என மக்கள் தெரிவிக்கின்றனர்.