சரக்கு வேன் மரத்தின் மீது மோதிய விபத்தில் வாலிபர் படுகாயமடைந்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இசக்கி ராஜா என்பவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து தொழில் செய்து வருகிறார். தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் நடக்கும் சாலை பணிக்காக இசக்கி ராஜா தனது வாகனத்தை பயன்படுத்தி வருகிறார். அதாவது சாலை அமைக்கும் பணிக்கு வரும் தொழிலாளர்களை வேனில் ஏற்றி வருவதும், வேலை முடிந்ததும் அவர்களை ஊரில் கொண்டு விடுவதும் இசக்கி ராஜாவின் பணியாகும். இந்நிலையில் தொழிலாளர்களுக்கு சாப்பாடு வாங்கி வருவதற்காக இசக்கிராஜா வேனில் வேடசந்தூர் சென்று விட்டு மீண்டும் ஒட்டன்சத்திரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
இதனையடுத்து அய்யனார் கோவில் பகுதியில் சென்றபோது சரக்கு வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இசக்கி ராஜாவை பக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.