கட்டுப்பாட்டை இழந்த லாரி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார்.
சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூரிலிருந்து சாம்பல் மரம் ஏற்றிக்கொண்டு பழனி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கருப்பணன்(47) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தார் வரதநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த புளியமரம் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கி விட்டது. இதில் ஓட்டுனர் கருப்பணன் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு வாகனம் மூலம் லாரியை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.