மத்திய பிரதேசத்தில் ஒரு லட்சம் ரூபாயை உணவு பொட்டலம் என நினைத்து குரங்கு தூக்கிச் சென்று பின்னர் அந்த ரூபாய் நோட்டுகளை மரத்திலிருந்து வீசியது அப்பகுதி மக்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்த ஒருவர் தனது துண்டில் ஒரு லட்சம் ரூபாயை முடிச்சுப்போட்டு எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு குரங்கு திடீரென்று வந்து அவர் வைத்திருந்த ஒரு லட்சம் பணத்தை மின்னல் வேகத்தில் தூக்கி சென்றது. இதனால் பதறிப்போன அந்த நபர் குரங்கிடம் இரு கரங்களை கூப்பி பணத்தை தந்து விடுமாறு கெஞ்சியுள்ளார்.
பின்னர் அந்த குரங்கு அருகில் இருந்த மரத்தின் மீது வேகமாக ஏறி அந்தத் துண்டை பிரித்து பார்த்த போது அதில் இருந்து உணவு இல்லை பணம் என தெரிந்து அந்த ரூபாய் நோட்டுகளை மரத்திலிருந்து வீச தொடங்கியது. இதில் அந்தப் பகுதியே மரத்திலிருந்து பண மழை பெய்தவாறு மாறியது. இதனை பார்த்த அப்பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அந்த பணத்தை வேகமாக எடுக்கத் தொடங்கினார். ஒரு சிலர் பணத்தை அவரிடம் திருப்பிக் கொடுத்தனர். இதில் ரூபாய் 56 ஆயிரம் மட்டுமே மீட்க முடிந்தது. மீதி பணம் கிடைக்காததால் அந்த நபர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.