கட்டுப்பாட்டை இழந்த லாரி மரத்தில் மோதி கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்மின்னல் பகுதியில் வினோத் குமார்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் கனரக லாரியில் மார்பில் கற்களை ஏற்றிக்கொண்டு பெங்களூரிலிருந்து மேடவாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோர மரத்தின் மீது மோதி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் வினோத்குமாரின் கால் இடிபாட்டில் சிக்கியதால் வெளியே வர முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் உதவியோடு இடிபாடுகளில் சிக்கியிருந்த வினோத்குமாரை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.