மராட்டிய மாநிலம் சாங்கிலி மாவட்டம் மீரஜ் தாலுகா மாய்சல் கிராமத்தில் கால்நடை டாக்டர் மாணிக் எல்லப்பா (49) வசித்து வந்தார். இவருடைய சகோதரர் ஆசிரியர் போபட்எல்லப்பா (54) ஆவார். அண்மையில் இவர்கள் மற்றும் இவர்களது 74 வயது தாய், மனைவிகள், 4 குழந்தைகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் 2 வீடுகளிலிருந்து இறந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவம் மராட்டியம் முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் இந்த குடும்பத்தினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அத்துடன் கடன் தொல்லை கொடுத்ததாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 13 பேரை கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் விசாரணையில் திடீர் திருப்பமாக குடும்பத்தினர் 9 பேரையும் விஷம்வைத்து கொலை செய்தது தெரியவந்து உள்ளது. அதன்பின் விசாரணையின்படி காவல்துறையினர் மந்திரவாதியான தீரஜ் சந்திரகாந்த் (39) மற்றும் அவரது டிரைவர் அப்பாஸ் முகமது அலி பகவான் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். இதில் முக்கியமான குற்றவாளியான அப்பாஸ் முகமது அலி பக்வான் என்பவர், இறந்த குடும்பத்தினரிடமிருந்து மறைக்கப்பட்ட புதையல் ஒன்றைக் கண்டுபிடிப்பதாகக் கூறி அவர்களிடமிருந்து 1 கோடி ரூபாய் வாங்கியுள்ளார். ஆனால் அவர்கள் கூறியபடி புதையலை கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
இதன் காரணமாக பணத்தை அந்த குடும்பத்தினர் திரும்ப கேட்டபோது, அவர்களை கொன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது குற்றம் சாட்டப்பட்ட மாந்திரவாதியும், அவரது கூட்டாளியும் வான்மோர்களின் வீடுகளை (குறிப்பாக ஜூன் 19) அடைந்து, மறைந்திருக்கும் புதையலைக் கண்டுபிடிக்க சில சடங்குகளைச் செய்வதாகக் கூறி, குடும்ப உறுப்பினர்களை மொட்டை மாடிக்கு வரவழைத்துள்ளனர். அதனை தொடர்ந்து அவர்களை ஒவ்வொருவராக வரவழைத்து, விஷம் கலந்த தேநீரை உட்கொள்ளச் கூறினார் என ஜூன் 19-20 நிகழ்வுகளின் வரிசையை விளக்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.