மராட்டியத்தில் மின்வெட்டு தவிர்க்க முடியாது எனவும் விவசாயத்திற்கு தடையின்றி விநியோகம் செய்யப்படுவதாகவும் மின்சாரத் துறை மந்திரி தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலம் உட்பட நாடு முழுவதும் கடும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மராட்டியத்தில் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது கோடைகாலம் நிலவிவரும் வேளையில் மின் உற்பத்தி பாதிப்பு மராட்டியத்தில் மின் தட்டுப்பாட்டிற்கு வித்திட்டுள்ளது.
இதனையடுத்து தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு மராட்டிய அரசு மின்வெட்டு அறிவித்துள்ளது. இதுபற்றி மாநில மின்சார துறை மந்திரி நிதின் ராவத் கூறியிருப்பதாவது, மராட்டியத்தில் சுமார் 4700 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. நிலக்கரி பற்றாக்குறை மற்றும் போதிய எரிவாயு விநியோகம் இல்லாததால் மின்வெட்டை தவிர்க்க முடியாததாகிவிட்டது. இருப்பினும் விவசாய தேவைகளுக்காக பகலில் 8 மணி நேரமும், இரவில் 8 மணி நேரமும் மின்சாரம் தடையின்றி வழங்கப்படுகிறது.
தற்போது கோஸ்டல் குஜராத் பவர் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து நாள் ஒன்றுக்கு 760 மெகாவாட் மின்சாரமும், என்.டி.பி.சி. நிறுவனத்தில் இருந்து ஒரு நாளைக்கு 673 மெகாவாட் மின்சாரமும் வாங்க ஜூன் 15-ந் தேதிவரை ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. மேலும் மராட்டிய மின் வினியோக நிறுவனமான மகாவிதரன், மின் பரிமாற்ற நிறுவனத்திடம் இருந்து 1500 முதல் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வாங்குகிறது.