முன் விரோதம் காரணமாக வாலிபர் தனது சித்தப்பாவை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோக்குடி கிராமத்தில் ஆபிரகாம் என்பவர் வசித்து வருகிறார். இவரது தமையன் கிறிஸ்துராஜாவுக்கு பிரதீப் அந்தோணிராஜ் என்ற மகன் உள்ளார். இந்த இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கெனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இரு குடும்பத்தினரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது ஆபிரகாம், பிரதீப் அந்தோணிராஜின் மனைவியிடம் பெரியவர்களிடம் மரியாதையாக பேச மாட்டாயா? என கேட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த பிரதீப் அந்தோணிராஜ் ஆபிரகாமை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ஆபிரகாமை அருகிலுள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பிரதீப் அந்தோணிராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.