தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலையூர் கிராமத்தில் எண்ணெய் வியாபாரியான சண்முகம்(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்வேதா(19), நிவேதா(17) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஸ்வேதா கோயம்புத்தூரில் இருக்கும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு கல்லூரியில் படிக்கும் தோழி மதுபாலா என்பவரை அழைத்துக்கொண்டு ஸ்வேதா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மருதாணி இலை பறிப்பதற்காக ஸ்வேதா, நிவேதா, மதுபாலா ஆகிய 3 பேரும் உடையார்பாளையம் பெரிய ஏரிக்கு அருகில் சென்றுள்ளனர்.
அதன்பிறகு மூன்று பேரும் ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக மூன்று பேரும் வழுக்கி ஏரியில் விழுந்தனர். இதில் நிவேதாவும், மதுபாலாவும் கரைக்கு திரும்பினர். ஆனால் நீச்சல் தெரியாத ஸ்வேதா தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனையடுத்து சிறுமிகளின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று ஸ்வேதாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்வேதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.