சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள பழந்தண்டலம் பகுதியைச் சேர்ந்த கவுதம்(26) என்பவர் பல் மருத்துவராக இருக்கிறார். இவர் திருமுடிவாக்கத்தில் சொந்தமான மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கவுதம் நேற்று மருத்துவமனையில் இருந்தபோது அங்கு கஞ்சா கர்ணா என்ற கருணாகரன் மற்றும் அவருடன் வந்த மர்ம நபர்கள் 3 பேர் தங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் டாக்டர் கவுதமின் தலை, கழுத்து, கை பகுதியில் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய மருத்துவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். இது குறித்து குன்றத்தூர் போலீசார் விசாரித்ததில் அதே பகுதியைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன் பல் மருத்துவரை ரூ.50,000 மாமுலாக தரவேண்டும் என கேட்டதாக தெரிகிறது. ஆனால் கவுதம் பணத்தை தர மறுத்ததால் அவரது நண்பர்களை வைத்து அவரை கத்தியால் குத்தியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து குன்றத்தூர் போலீசார் செந்தமிழ் செல்வன் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.