வீட்டின் பூட்டை உடைத்து நகை பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள்.
பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம், ஔவையார் தெருவில் வசித்து வரும் பரமேஸ்வரன்(37) மனைவி சீதாலட்சுமி. பரமேஸ்வரன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக சொந்த ஊருக்கு வந்திருந்தார். அச்சமயம் பரமேஸ்வரனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் சீதாலட்சுமி அரியலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு பரமேஸ்வரனை அழைத்து சென்றார். பின் அவர்கள் சிகிச்சை பெற்று விட்டு மாலை வீட்டிற்கு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் நகையும் 28500 ரூபாயும் திருடு போனது தெரியவந்தது
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் மோப்பநாய் நிஞ்சாவை வைத்து மோப்பம் பிடித்து கைரேகை நிபுணர்களை வைத்து கைரேகை பதிந்து தடயங்களை சேகரித்து வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.