ஏராளமான குடியிருப்புகள் இருக்கும் பகுதியில் மர்மநபர்கள் வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வி.ஐ.பி. நகரில் பத்மாவதி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகனான ஆனந்த் என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால் மருமகள் சௌமியா மற்றும் பேத்தியான 10 மாத கைக்குழந்தையுடன் பத்மாவதி பெரம்பலூரிலுள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தையை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் குழந்தை குணமடைந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து பெரம்பலூரிலுள்ள தங்களது வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது ஒரு அறையில் உள்ள இரண்டு பீரோல்கள் உடைக்கப்பட்டு, அதில் உள்ள துணிமணிகள் கலைந்து கிடந்துள்ளது. மேலும் பீரோவில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 18 1/2 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து பத்மாவதி பெரம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு துப்பறியபட்டுள்ளது. பின்னர் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலூரில் ஏராளமான குடியிருப்புகள் இருக்கும் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.