தர்மபுரி பி ஆர் சீனிவாச ராவ் தெருவில் ரகு என்பவர் நகைக்கடை ஒன்றை வைத்து இருக்கிறார். இவரது மனைவி மீனா (27). இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதற்கு இடையே ரகுவின் பெரியப்பா கடந்த சில தினங்களுக்கு முன்பாக இறந்துள்ளார். அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊரான பொன்னாகரத்தை அடுத்த வண்ணாத்திப்பட்டிக்கு ரகு குடும்பத்துடன் சென்றிருந்தார். இந்த நிலையில் மீனாவின் தந்தையான தர்மபுரி நகராட்சி வருவாய் ஆய்வாளர் மாதயன் உடல் நலம் பாதிக்கப்பட்டு தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த தகவல் அறிந்ததும் தனது தந்தையை பார்ப்பதற்காக மீனா கணவருடன் இரவு மோட்டார் சைக்கிளில் தர்மபுரிக்கு வந்துள்ளார். அப்போது மாங்கரை பிரிவு ரோட்டில் வந்து கொண்டிருந்த போது குறுக்கே வந்த சைக்கிள் மீது மோதாமல் இருக்க ரகு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்த முயற்சி செய்துள்ளார். இதில் நிலை தடுமாறி கணவன் மனைவி இரண்டு பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர்.
அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்தநிலையில் மீனா மேல் சிகிச்சைக்காக சேலத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் செல்லும் வழியில் அவர் பரிதமாக உயிரிழந்துள்ளார். ரகுவிற்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விபத்து பற்றி பொன்னகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தையை பார்க்க வந்த இடத்தில் மகள் விபத்தில் பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.