திருப்பதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களிடமிருந்து நகைகளை திருடிய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அலிபிரி அருகே இருக்கின்ற சிம்ஸ், ரூயா மற்றும் பத்மாவதி மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனை நிர்வாகத்தினர் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்காமல் அரசு விதிமுறையின்படி நல்லடக்கம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் அணிந்திருந்த நகைகள் காணாமல் போய்விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுபற்றி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். அதற்கு மருத்துவர்கள்,தங்களின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்னதாக தாங்கள் அணிந்திருக்கும் நகைகளை வீட்டில் வைத்து விட்டு செல்லுமாறு அறிவுறுத்தி இருக்க வேண்டும்.தற்போது நகைகள் காணாமல் போய்விட்டது என்றால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்றுக் கொள்ள முடியாது என்று மிக அலட்சியமாக பதிலளித்துள்ளனர். அதன் பிறகு மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் ராமிடம் அவர்கள் புகார் அளித்துள்ளனர். அவர் திருப்பதி போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்கையில் கொரோனா நோயாளிகள் அணிந்திருக்கும் மோதிரத்தை கழற்றி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இதுபற்றி அலிபிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரா வழக்குப்பதிவு செய்து, மருத்துவமனை ஊழியர்கள் திருப்பதி மல்லகுண்டாவை சார்ந்த 28 வயதுடைய சுனில் குமார் மற்றும் செட்டி பள்ளியை சேர்ந்த 30 வயதுடைய பாரதி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 4 மோதிரங்கள் மற்றும் 6 ஆயிரம் ரூபாய் பணத்தை கைப்பற்றினர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் நகைகள் திருடப்பட்ட சம்பவம் திருப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.