மர்மமான முறையில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொருவளூர் கிராமத்தில் மாற்றுத்திறனாளியான மலர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு பேருந்தில் மணலூர்பேட்டை வந்துள்ளார். அங்கிருந்து பொருவலூர் கிராமத்திற்கு பேருந்து இல்லாததால் இரவு முழுவதும் அதே பகுதியில் இருந்த பெட்ரோல் பங்கில் தங்கி இருந்தார். இந்நிலையில் மறுநாள் காலை மலர் பெட்ரோல் பங்கில் மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து மயங்கி நிலையில் இருந்த மலரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதன்பின்னர் சிகிச்சை முடிந்து மலர் தனது சொந்த ஊருக்கு திரும்பினார். இந்நிலையில் சிறிது நேரத்திலேயே மலர் திடீரென உயிரிழந்து விட்டார். இதனையடுத்து மலரின் உறவினர்கள் அவரை சொந்த ஊரிலேயே அடக்கம் செய்தனர். இதுகுறித்து பொன்னம்மாள் என்பவர் தனது தங்கச்சியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தாசில்தார் பாண்டியன் தலைமையில் மலரின் உடலை தோண்டி எடுத்து அங்கு வைத்து பிரேத பரிசோதனை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.