பென்னிக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இருந்த பேரவையில் ரத்தக்கறை இருப்பது தற்போது வழக்கில் ஒரு சாட்சியாக பார்க்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் செல்போன் கடை பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவரும் காவல்துறையில் சித்ரவதை செய்து மரணம் அடைந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் வெளியாகியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் பாரதிதாசன் பல்வேறு விஷயங்களை தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த வழக்கில் அங்கு வேலை பார்த்த பெண் காவலர் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் லத்தியால் அடித்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் பல காயங்கள் இருப்பதாகவும், இருவரின் பின் பகுதியில் அதிகளவு காயம் இருப்பதாக நீதித்துறை நடுவர் அறிக்கையில் உறுதி செய்துள்ளார்.
இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று குறிப்பிட்டு இருந்த நிலையில் தற்போது அதிர்ச்சியளிக்கும் புதிய தகவல் கிடைத்துள்ளது. பென்னிக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இருந்த போர்வையில் ரத்தக்கறை படிந்து இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல் வழக்கின் முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றது.