பழைய சைக்கிளின் உதிரி பாகங்களை வைத்து செய்யப்பட்ட அலங்கார பொருள் ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவ கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் சிகிச்சைக்கு வந்து செல்வதால் ஆயுர்வேத மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்தில் தொடங்கப்பட்ட உணவகத்தில் பல்வேறு அலங்கார பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக பழைய சைக்கிளின் உதிரிபாகங்கள், பழைய பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை வைத்து பலவிதமான அலங்கார பொருட்களை செய்துள்ளனர்.
அதாவது சைக்கிள் டயரில் உள்ள ரிம்களை வைத்து உருவாக்கப்பட்ட மேஜை, பழைய சைக்கிள் ஒன்றில் பலகை வைத்து தயாரிக்கப்பட்ட மேஜை, வீடுகளில் பயன்படுத்திய தண்ணீர் கேன்களில் உருவாக்கப்பட்ட பறவை கூடுகள், பழைய சைக்கிள் கூடைகளை சுவரில் பதித்து செடிகள் வளர்ப்பது உள்ளிட்ட பல்வேறு அலங்காரப் பொருட்கள் உருவாக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இதனை மருத்துவமனைக்கு செல்லும் நபர்கள் பார்த்து ரசிக்கின்றனர்.