தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்படி சட்ட விரோதமாக போதைப்பொருள் விற்பனை செய்வது குறித்து சிறப்பு சோதனை இந்த மாதம் 6-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அந்த சோதனையில் 23 கோடி ரூ மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 838 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் உரிய அனுமதியின்றி போதை தரும் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்படி, போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் உணவு பாதுகாப்புத் துறை இணைந்து தமிழகம் முழுவதும் உள்ள மருந்தகங்களில் அதிரடி சோதனை செய்தனர்.
அதன்பின் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தஞ்சாவூர், சேலம், வேலூர் மற்றும் திருப்பத்தூர் போன்ற இடங்களில் சிறப்பு சோதனை நடைபெற்றது. அப்போது உரிய மருத்துவர் பரிந்துரை இன்றி விற்பனை செய்யக்கூடாது என மருந்தகங்களுக்கு மாநில போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த திடீர் சோதனை வருங்காலத்தில் தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் மீறி மருந்தகங்களில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டால் 10581 என்ற உதவி எண்ணிற்கும், 949810581 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும் தகவல் கொடுக்குமாறு பொதுமக்களை மாநில போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறை கேட்டுகொண்டுள்ளது.