மருத்துவ உபகரணங்கள் அனுப்புவதாக கூறி பணத்தை மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் பிரகாஷ்(40). இவருடைய நண்பர் ஒருவர் மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்யும் கம்பெனி நடத்தி வந்துள்ள நிலையில் அவரின் மெடிக்கல் குரூப் என்ற வாட்ஸ்அப் குழுவில் பிரகாஷ் இருந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷின் வாட்ஸ் அப் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசிய நபரொருவர் தான் குர்னூர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து மாஸ்க் மற்றும் மருத்துவ உபகரண கருவிகள் குறைந்த விலைக்கு மொத்தமாக தருகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கான விலை பட்டியலையும் அனுப்பி வைத்து உங்களுக்கு வேண்டுமென்றால் உங்களுடைய முகவரிக்கு அனுப்பி வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதை நம்பிய பிரகாஷ் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு 2 தவணைகளாக ரூ 14 லட்சத்தை அனுப்பினார். ஆனால் பணத்தை பெற்ற அந்த நபர் பிரகாஷ்க்கு மாஸ்க், மருத்துவ உபகரண கருவி எதுவுமே அனுப்பவில்லை.
இதையடுத்து அந்த மர்ம நபர் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பிரகாஷ் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்பனா, சப் இன்ஸ்பெக்டர் முகம்மது அசாருதீன், ரவிசங்கர் மற்றும் காவல்துறையினர் வழக்குப் பதிந்து பணத்தை மோசடி செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.