மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அருள்மணிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மல் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சேலம் அருகே இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரிக்கு அருகிலேயே வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் நிர்மல் குமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெற்றோரிடம் செல்போனில் பேசியுள்ளார். நேற்று நீண்ட நேரமாகியும் நிர்மல்குமார் செல்போனை எடுக்காததால் சந்தேகமடைந்த அருள்மணி நிர்மல் குமாரின் நண்பரான ஜெயபிரகாஷுக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து ஜெயபிரகாஷ் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது நிர்மல்குமார் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நிர்மல்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நிர்மல்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.