வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் முனுசாமி தெருவில் மத்திய அரசில் ஜி.எஸ்.டி பிரிவில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தருண்குமார், நவீன்குமார் ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். இதில் நவீன் குமார் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜார்ஜியா நாட்டில் மருத்துவம் படித்து முடித்துள்ளார். இந்நிலையில் வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தகுதி தேர்வில் நவீன் குமார் தோல்வியடைந்தார்.
இதனால் வருகிற டிசம்பர் 4- ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்வில் எப்படியாவது தேர்ச்சி பெற வேண்டும் என வீட்டில் இருந்தபடியே நவீன்குமார் படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஜெயராஜும், லட்சுமியும் உறவினர் வீட்டில் நடைபெற்ற விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டனர். அப்போது தேர்வில் மீண்டும் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் நவீன்குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நவீன்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.