தமிழகத்தின் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புகளில் தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது பற்றிய மசோதா ஒன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பல்வேறு வலியுறுத்தலுகளுக்குப் பிறகு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த நிலையில் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் ஒருவர் கோரிக்கை விடுத்திருந்தார். அந்தக் கோரிக்கை முறைப்படி மனுவாக தாக்கல் செய்யப்பட்டால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பற்றிய நடவடிக்கைகளை ஆய்வு செய்து கொண்டிருக்க முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு இது ஒருபோதும் பொருந்தாது. அதுமட்டுமன்றி அரசு உதவி பெறும் பள்ளிகளாக இருந்தாலும் அவை தனியார் பள்ளிகள் தான்” என்று அவர் கூறியுள்ளார்.