மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கை ஜூலை மாதத்திற்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் படிப்புகளுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டுகளுக்கு இடங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இளங்கலை படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு 15%, முதுகலை படிப்பிற்கு எம்டிஎம்எஸ், எம்டிஎஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு 50% இடங்களையும் அகில இந்திய ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இந்த இடங்களுக்கான கலந்தாய்வு மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் எஸ்சிஎஸ்டி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் தவிர இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு முறையில் சேர்க்கை நடத்தப்படுவது கிடையாது. மற்ற அனைத்து பிரிவுகளையும் பொதுப்பிரிவாக அமைத்து மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் குறைக்கப்படுகிறது.
வழக்கு விவரம் :
இதனால் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட அரசியல் காட்சிகள் சார்பில் தனித்தனியாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது. அதன்படி திமுக, பாமக, மதிமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த நிலையில் ஜூன் 22ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது 27% இடஒதுக்கீடு கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஜூலை 8ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது, இதனால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜூலை 9ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.