மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இந்த ஆண்டே 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து இரண்டு நாட்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகள் மற்றும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்யும் என உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு அமல்படுத்துவது தொடர்பாக இரண்டு நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கழகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.