மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் எந்த ஒரு குளறுபடியும் கிடையாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மசோதா சட்ட மன்றத்தில் அனைத்து அமைச்சர்களின் ஒப்புதலையும் பெற்று தமிழக ஆளுநரின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரை, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடத்த முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதனால் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கால தாமதம் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே புதுக்கோட்டையில் இன்று விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்திக்கும் போது கூறுகையில், “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் எந்த ஒரு குளறுபடியும் இல்லை. அரசு பள்ளி மாணவர்களின் நலன் மற்றும் அக்கறையை கருத்தில் கொண்டுதான் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் சட்டமன்றத்தில் இந்த இட ஒதுக்கீடு பரிந்துரையை முன்வைத்துள்ளார். தற்போது இந்த மசோதா ஆளுநரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனால் எந்த குழப்பமும் அடையத் தேவையில்லை. ஆளுநர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார்”என்று அவர் கூறியுள்ளார்.