மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் ஜனவரி 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசின் ஒதுக்கீட்டின் கீழ் 6,958 எம்.பி.பி.எஸ் இடங்களும், 1,925 பி.டி.எஸ் இடங்களும் இருக்கின்றன. இந்தப் படிப்பில் சேருவதற்கு நேற்று காலை 10 மணி முதல் ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்நிலையில் ஆன்லைனிலும், நேரடியாகவும் மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நேரில் விண்ணப்பிக்க ஜனவரி 10-ஆம் தேதி மாலை 5 வரையும், அதேபோல் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜனவரி 7ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கலந்தாய்வு தேதியை மத்திய அரசு வெளியிட்ட பிறகு அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறும். அதனை தொடர்ந்து மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்படும்.