நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் கடந்த 7-ம் தேதி வெளியான நிலையில் கலந்தாய்வு பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான மருத்துவ கவுன்சிலிங் முடிவடைந்த பிறகு, தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறும். இந்த மருத்துவ படிப்பிற்கு 5050 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் நீட் தேர்வில் மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் எடுத்த காரணத்தினால் கட் ஆப் மார்க்கும் குறைவாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு கலந்தாய்வின் போது கட்டணத்தை செலுத்துவதற்கான புதிய விதிமுறை நடப்பாண்டிலிருந்து அறிமுகப் படுத்தப்படுகிறது. அதாவது கட்டண கமிட்டி குழு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் தான் தனியார் கல்லூரிகள் வசூலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சில கல்லூரிகளில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாகத்தான் நடப்பாண்டில் கலந்தாய்வு கூட்டத்தின் போதே மாணவர்கள் கட்டணம் செலுத்தும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
இதனையடுத்து மாணவர்கள் இணையதளம் வாயிலாக தனியார் கல்லூரிகளுக்கு கட்டணத்தை செலுத்திய பிறகு அட்மிஷன் கார்டு கொடுக்கப்படும். இந்த அட்மிஷன் கார்டை கொடுத்து மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே கலந்தாய்வு கூட்டத்தின் போது கட்டணத்தை செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.