மருந்துகளை தவறான முறையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மருந்து விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மருந்து வணிகர்கள் சங்க தலைவர் குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் ஹபீப் முகமது கலந்து கொண்டார். இவர் கூட்டத்தில் கலந்து கொண்டவர் களிடம் மருந்து விற்பனையாளர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.
அதன் பிறகு வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் மயக்க மாத்திரைகள் போன்றவற்றை முறையாக கையாள வேண்டும் எனவும் வட மாநில மருத்துவர்கள் கொடுக்கும் மருந்து சீட்டுக்கு மருந்துகள் கொடுக்க கூடாது எனவும் மருந்துகள் வாங்கக்கூடிய நபர் சரியான நபரா என்பதை சோதனை செய்த பிறகு மருந்துகளை அவர்களிடம் கொடுக்க வேண்டும் எனவும் கூறினார். இதனையடுத்து வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்துவது தெரிய வந்தால் மருந்து விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு 2 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார். மேலும் மருந்து விற்பனையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் கூறினார்.