கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்றுகாலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். இதையடுத்து அவர் முகத்தில் சந்தனம் பூசிக்கொண்டும், நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டும் நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டார். அத்துடன் தான் கொண்டு வந்திருந்த மருந்து, மாத்திரைகளை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரிடம்விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் அவர் விருத்தாசலம் அடுத்த கார்குடல் பகுதியில் வசித்து வரும் மணிகண்டன் (37) என்பதும், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட அவர் வேலை இன்றி உள்ளதால் மருந்து, மாத்திரைகள் வாங்க மிகவும் சிரமப்படுகிறார். இதனால் இலவசமாக மருந்து-மாத்திரைகள் வழங்குவதுடன், ஒவ்வொரு மாதமும் ரூபாய்.5 ஆயிரம் உதவித் தொகை வழங்கக்கோரி மனு அளிக்க வந்தது தெரியவந்தது. அதன்பின் காவல்துறையினர் மணிகண்டனிடம் உங்கள் கோரிக்கை குறித்து கலெக்டரிடம் மனு கொடுங்கள். பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். அதை ஏற்றுக் கொண்ட மணிகண்டன் போராட்டத்தை கைவிட்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துவிட்டு சென்றார்.