ஜார்ஜியா மாகாணத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க நாட்டில் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நேற்று முன்தினம் இரவில் வளாகத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சூட்டுள்ளார். இதனால் குடியிருப்பு வளாகத்தில் இருந்த அனைவரும் அலறியடித்தப்படி அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து மர்ம நபர் கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் மர்ம நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 6 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மற்ற 3 பேரும் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து தாக்குதலை நடத்திவிட்டு தப்பி ஓடிய மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.