இன்ஜினியர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் செல்லும் சாலையில் இருக்கும் பாலத்தின் கீழே மர்மமான முறையில் ஒரு ஆண் இறந்து கிடந்தார். இதனை பார்த்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட நபர் பெரம்பலூர் ரோஸ் நகரை சேர்ந்த சிவில் இன்ஜினியரான முருகேசன்(58) என்பது தெரியவந்தது.
இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், கோபிநாத் என்ற மகனும், மோனிஷா என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முருகேசன் வெளியே சென்றுள்ளார். பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அதன் பிறகு வழக்கமாக மது அருந்தும் பாலத்தின் கீழ் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். எனவே யாரேனும் அடித்து கொலை செய்து முருகேசனின் சடலத்தை வீசி சென்றார்களா? அல்லது மது போதையில் கீழே விழுந்து இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.