கலசபாக்கம் அருகே ஏரியில் மர்மமான முறையில் ஏழு மயில்கள் இறந்து கிடந்துள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே காப்பலூர் பெரிய ஏரியில் 3 ஆண் மயில்கள், 4 பெண்கள் உட்பட 7 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளன. இதைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கால்நடை மருத்துவர் சம்பவ இடத்திற்கு வந்து பிரேத பரிசோதனை செய்துள்ளார்.
அப்போது வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, பிரதே பரிசோதனை செய்த அறிக்கை வந்தால்தான் மயில்கள் எப்படி இறந்தது என்பது தெரிய வரும் என்றார்கள். மேலும் மயில்கள் விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வந்ததால் அதை தடுப்பதற்காக விவசாயிகள் யாரோ மருந்து வைத்து கொன்றார்களா? என்று விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தார்கள். மயில்களுக்கு மருந்து வைத்து கொன்றவர் யாராக இருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.