Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மர்ம நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்…. காப்பாற்ற முடியாமல் திணறும் பெற்றோர்…. தமிழக அரசுக்கு கோரிக்கை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.பாறைப்பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் முகேஷ்(10) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு முகேஷ் திடீரென மயங்கி விழுந்தான்.

இதனால் சிறுவனை பழனி, திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிறுவனின் உடல்நலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனையடுத்து டாக்டர்கள் பரிசோதனை செய்து சிறுவனுக்கு வில்சர் காப்பர் என்னும் மர்ம நோய் தாக்கியிருப்பதாக தெரிவித்தனர். அப்போது கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரத்த சுத்திகரிப்பு செய்தால் சரியாகிவிடும் என டாக்டர்கள் கருதி சிகிச்சை அளித்தனர்.

அதன் பிறகும் சிறுவனின் உடல்நிலை மோசமானது. இதனால் சிறுவன் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். தற்போது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் சிறுவனை காப்பாற்றி விடலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஏழை தம்பதியினர் மகனுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும் போது, பழனி, திண்டுக்கல், மதுரை, புதுச்சேரி என பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றும் மகனின் நோய் சரியாகவில்லை. இதுவரை 7 லட்சம் ரூபாய் வரை செலவு செய்தும் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற நிலைக்கு வந்து விட்டோம். எனவே தமிழக அரசு மகனுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |