கண்காணிப்பு கேமரா அமைக்க வலியுறுத்தி வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள ஊஞ்சலூர் அருகே வெங்கம்பூர் கம்மங்காட்டு களம் பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரகதம் என்ற மனைவி இருக்கிறார். இவர் பேரூராட்சி 13-வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். இவர் வீட்டில் 15 ஆடுகள், கோழிகள், கறவை மாடுகள் போன்றவற்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென கால்நடைகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது கருப்பு நிறத்தில் மர்ம விலங்கு ஒன்று தொழுவத்திலிருந்து வெளியே ஓடியுள்ளது. இந்த விலங்கு 2 கோழிகள் மற்றும் ஒரு ஆடு போன்றவற்றை கடித்து குதறி உள்ளது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இறந்து கிடந்த ஆடுகள் மற்றும் கோழிகளை பார்வையிட்டனர். இதே பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு விவசாயிக்கு சொந்தமான 8 ஆடுகள் மற்றும் 3 கோழிகள் போன்றவற்றை மர்ம விலங்கு கடித்துக் கொன்றுள்ளது. மேலும் தொடர்ந்து கால்நடைகளை மர்ம விலங்குகள் தாக்குவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதோடு சிசிடிவி கேமராக்களை அப்பகுதியில் வைத்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் வனத்துறை அதிகாரி களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.