மர்ம வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி கடந்த ஒரு வாரத்தில் 50 நாய்கள் செத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் மர்ம வைரஸ் ஒன்று நாய்களுக்கு தாக்கி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள அங்கோலா, ஜோயிடா ஆகிய தாலுகாக்களில் கெனைன் பார்வோ என்ற வைரஸ் ஏராளமான நாய்களைப் பாதித்திருப்பதாக கண்டறியப்பட்டது. இந்த மர்ம வைரஸ் தாக்குதலினால் நாய்களுக்கு தனது சக்தியை இழக்கும் நிலை முதலில் ஏற்படுகிறது. பின்னர் வாந்தி ஏற்பட்டு சாப்பிட முடியாத நிலை அடைந்து குறுகிய நாட்களிலே இறந்து விடுகின்றன.
இந்த வைரஸ் 45 நாட்கள் முதல் 2 மாத வயதுடைய குட்டி நாய்களை அதிகளவில் பாதித்து வருகிறது. மேலும் இந்த மாவட்டத்தில் பெரும்பாலான கால்நடை மருத்துவமனைகளில் டாக்டர்கள் மற்றும் ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக போதுமான சிகிச்சை அளிக்க முடியாமல் கடந்த ஒரு வாரத்தில் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் மடிந்து வருகின்றன. எனவே பாதிக்கப்பட்ட நாய்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.