குடும்பம் நடத்துவதற்கு வர மனைவி மறுப்பு தெரிவித்ததால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் சுல்தான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பஸ் பாடி கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நூர்ஜகான் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சுல்தானை அவரது மனைவி கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த நூர்ஜகான் தனது குழந்தைகளை அழைத்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து குடும்பம் நடத்த வருமாறு சுல்தான் நூர்ஜகானை அழைத்துள்ளார்.
அதற்கு நூர்ஜகான் மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் இருந்த சுல்தான் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுல்தானின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.