நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக மறு உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்படும் என்று அம்மாநில சுகாதார அமைச்சர் பன்னா குப்தா தெரிவித்துள்ளார். மேலும் திருமணங்கள், இறுதிச்சடங்குகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி என்றும் சந்தைகள் இரவு 8 மணி வரை இயங்கவும் அனுமதித்துள்ளார். அதுமட்டுமின்றி அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே இயங்க அனுமதி என்றும் தெரிவித்துள்ளார்.