பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் தன் கணவர் இளவரசன் பிலிப்பின் இறுதிச் சடங்கை நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்குகளை நடத்த மகாராணி அனுமதியளித்ததை தொடர்ந்து வரும் ஏப்ரல் 17ஆம் தேதி அன்று மாலையில் இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. எனினும் அனைத்து இறுதிச்சடங்கு நிகழ்வுகளும் நேரலையில் காண்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இறுதிச்சடங்கு நடைபெறும் நாளில் மதியம் 3 மணியளவில் இங்கிலாந்து முழுவதும் ஒரு நிமிடத்திற்கு மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. மேலும் கொரோனா விதிமுறைகளை கருத்தில் கொண்டு இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அரச குடும்ப உறுப்பினர்கள் உட்பட 30 நபர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இறுதிச்சடங்கில் இளவரசர் ஹரி கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரின் மனைவி மேகன் கர்பமாக இருப்பதால் மருத்துவர்களின் ஆலோசனையினால் விமான பயணத்தை தவிர்த்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா காரணத்தால், ஆடம்பரமான ஊர்வலம் மற்றும் அரசு மரியாதைகள் எதுவும் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சனிக்கிழமை அன்று மாலையில் இளவரசர் பிலிப்பின் உடலின் வின்ஸ்டர் கோட்டையிலிருந்து தகுந்த மரியாதைகளுடன் அருகில் இருக்கும் செயின்ட் ஜார்ஜ் சேப்பலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
மேலும் இந்த ஊர்வலம் எட்டு நிமிடங்களுக்கு நடைபெற இருக்கிறது, இதில் ராணுவத்தினர் கலந்து கொள்வார்கள். அதில் குடும்பத்தினரும் பாதுகாப்பு அதிகாரிகளும் பங்கேற்பார்கள். சுமார் 3 மணியளவில் இந்த ஊர்வலம் செயின்ட் ஜார்ஜ் செப்பலுக்கு சென்றுவிடும். அதனைத்தொடர்ந்து ஒரு நிமிடத்திற்கு மௌன அஞ்சலி செலுத்தப்படும். தேவாலயத்தின் மணிகள் இறுதி ஊர்வலம் முடிவடையும் வரை முழங்கப்படும். அதனுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது.