விழுப்புரத்திலுள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் எம்.பி சி.வி.சண்முகம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் எம்.பி சி.வி.சண்முகம் பேசியதாவது “அ.தி.மு.க-வை கட்டுப்படுத்தவும், ஆலோசனை கூறவும் பொதுக்குழு இருக்கிறது. அ.தி.மு.க-வின் பொதுக் குழுதான் உச்சபட்ச தலைமை.
அந்த பொதுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ன கூறுகிறாரோ அதனைத் தான் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். டிடிவி தினகரன் வைத்து இருப்பது கட்சியல்ல கூட்டம் ஆகும். தினகரனை நம்பி சென்ற 18 சட்டப் பேரவை உறுப்பினர்கள் நடுரோட்டில் நின்று கொண்டிருக்கின்றனர்.
முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு முழுக்க முழுக்க காரணம் டிடிவி தினகரன் தான். அதாவது, தி.மு.க.வுடன் தினகரன் கூட்டணி வைத்து சில வழக்குகளை நீக்கியதால் தான் ஜெயலலிதா சிறைக்கு போகும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாகவே ஜெயலலிதா தோட்டத்தில் இருந்து தினகரனை வெளியேற்றினார்” என்று அவர் பேசியுள்ளார்.