கேகே கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். கிருஷ்ணகுமார் குன்னத்திற்கு பல இதய அடைப்புகள் இருந்துள்ளன. சரியான நேரத்தில் முதலுதவி சிகிச்சையான சிஆர்பி வழங்கப்பட்டிருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் என்று பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொல்கத்தா போலீஸ் விரிவான பிரேத பரிசோதனை அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. மருத்துவ அறிக்கையின்படி இதயம் செயல்பாடு குறைந்தால் கடுமையான நுரையீரல் வீக்கம் ஏற்பட்டு அதன் காரணமாக ஏற்பட்ட ஹைபோக்சியாவின் விளைவுகளை தொடர்ந்து மரணம் ஏற்பட்டுள்ளது.
இதயக் கோளாறு காரணமாக உடலில் போதிய அளவு ரத்தம் பாயாததால் திசுக்களில் போதிய அளவு ஆக்ஸிஜன் இல்லாததே ஹைபோக்சியா ஏற்பட காரணம் என கூறப்படுகிறது. மேலும் இதயத்தை சுற்றியுள்ள திசுக்கள் அதிகரித்தது இடதுபக்க ஆர்டரியின் கீழ் இயல்பற்ற கொழுப்பு படிந்துள்ளது. பலவீனமாக இருந்து வந்த அவரது இதயத்தின் செயல்பாடு களும் இதற்கு ஒரு காரணமாகும். இந்த நிலையில் இதயத்தால் போதுமான அளவு ஆக்சிஜன் ஏற்றப்பட்ட வெப்பத்தை வெளியேற்ற முடியவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக அவர் தனது கை மற்றும் தோல்களில் வலியை அனுபவிப்பதாக தொலைபேசி உரையாடலின்போது தனது மனைவியிடம் தெரிவித்திருக்கின்றார். சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த பிரேதபரிசோதனை வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் முடிவில் கிட்டத்தட்ட 3 மணி நேரம் மேடை நிகழ்ச்சிக்குப் பின் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என கூறப்பட்டுள்ளது. மேலும் மாநில அறிவியல் ஆய்வகத்தில் இருந்து முழு அறிக்கையும் கிடைத்தபின் காவல்துறையின் இறுதி கருத்து தெரிவிக்கும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.