செங்கோட்டை நகரசபை தலைவர் தேர்தலில் திமுக அதிமுகவினர் இடையில் மோதல் ஏற்பட்டு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகரசபை கூட்ட அரங்கில் அலுவலர் இளவரசன் தலைமையில் நேற்று தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நகரசபை தலைவர் பதவிக்கு அதிமுக இரண்டாவது வார்டு உறுப்பினர் ராமலட்சுமி மற்றும் தி.மு.க சார்பாக 6வது வார்டு உறுப்பினர் பினாஷா ஆகியோர் போட்டியிட்டனர்.
நேற்று தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திமுக உறுப்பினர் எஸ் எம் ரஹீம், சுயேச்சை உறுப்பினர்கள் துரைப்பாண்டி ஆகியோர்கள் வாக்குப் பெட்டியில் இருந்து வாக்குச்சீட்டை கிழிக்க சென்றுள்ளார்கள். அதோடு மேஜை மற்றும் நாற்காலிகளை சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதை தட்டி கேட்ட அதிமுக உறுப்பினர் மற்றும் பாஜக உறுப்பினர்கள் அவர்களிடமிருந்து வாக்குச் சீட்டை வாங்கினார்கள்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திமுக உறுப்பினர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதை அறிந்த தேர்தல் நடத்தக் கூடிய அலுவலர் இளவரசன் தேர்தலை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு கோபமடைந்த அதிமுக பாஜக வினர் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் முன்பு தங்களை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.