திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சுந்தர்ராஜன் நாகம்மாள் கோவில் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது 3 பேர் மறைவான இடத்தில் அமர்ந்து கொண்டு போதை மாத்திரைகளை வாலிபர்கள், சிறுவர்கள் உள்ளிட்டோரிடம் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுந்தர்ராஜன் உடனடியாக அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் போதை மாத்திரைகளை விற்பனை செய்த மூன்று பேரையும் கையும், களவுமாக பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அரியமங்கலம் காமராஜர் நகர சேர்ந்த கதிரேசன்(21), தீனா(24) மற்றும் அவரது தம்பி கிறிஸ்டோபர்(23) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 970 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.