2003ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வுபெற்றவர் மகாதீர் மொஹமத். உலகின் மிகவும் வயதான பிரதமர் என்று சிறப்பை பெற்றவர் இவர் கடந்த 2018ல் இவர் மீண்டும் மலேசியாவின் பிரதமர் ஆன போது உலகமே இவரை கொண்டாடியது. இவர் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற நிலையில், கூட்டணிக்குள் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் சண்டை நிலவி வந்ததால் மகாதீர் மொஹமத், அன்வர் இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் விமர்சித்து கொண்டனர்.
இதனையடுத்து திடீர் திருப்பமாக மகாதீர் மொஹமத் பதவி விலக முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். மேலும் தனது ராஜினாமா கடிதத்தை மலேசிய மன்னரிடம் கொடுத்தார். அவரது ராஜினாமாவை மலேசிய மன்னர் ஏற்றுக் கொண்டு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை மகாதீரை இடைக்காலப் பிரதமராக நியமித்துள்ளார். இதனால் மலேசிய அரசியலில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து மலேசியாவின் புதிய பிரதமர் யார் என்ற எதிர்பாப்பு இருந்த நிலையில், மலேசியாவின் 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால் மலேசியாவின் பிரதமர் யார் என்பது பற்றி அடுத்த மாதம் 2ஆம் தேதி கூடும் நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்படும் என்று மலேசியாவின் இடைக்காலப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது கூறியுள்ளார். மேலும் அதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் உடனடி தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் மஹதீர் தெரிவித்துள்ளார்.