மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாலுவேதபதி கிராமத்தில் விவசாயியான தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மலேசியா நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி நாலுவேதபதி பகுதியிலுள்ள சில நபர்களிடம் 10,00,000 ரூபாய் வசூல் செய்து, அதனை சென்னையிலுள்ள ராமலிங்கம் என்பவரிடம் கொடுத்துள்ளார். மேலும் பணம் கொடுத்து 2 வருடங்களான நிலையில் 2 பேரை மட்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் மீதமுள்ளவர்களை மலேசியாவுக்கு அனுப்பவில்லை. மேலும் அவர்களிடமிருந்து வாங்கிய ரூ.6,40,000-த்தை திருப்பி கொடுக்கவில்லை.
இதுபற்றி அவர்கள் ராமலிங்கத்திடம் பலமுறை கேட்டும், அவர் பணம் தராமல் காலம் கடத்தி வந்துள்ளார். இதனையடுத்து தமிழ்ச்செல்வன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப் பதிந்த குற்றப்புலனாய்வுத் துறை காவல்துறையினர் மலேசியாவுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட ராமலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ராமலிங்கத்தின் மனைவி மற்றும் வெங்கடேஷ் ஆகியோரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.