ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பகுதியில் கர்நாடகா அரசு பேருந்து ஒன்றின் மீது லாரி மோதிய கோர விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். கர்நாடகாவிலிருந்து தமிழகம் நோக்கி அரிசி ஏற்றிய லாரி ஒன்று திம்பம் மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஐந்தாவது கொண்டை ஊசி வளைவு அருகே,கும்பகோணத்தில் இருந்து மைசூர் நோக்கி சென்ற கர்நாடக அரசு பேருந்தின் மீது எதிர்பாராத விதமாக லாரி நேருக்கு நேர் மோதியது.
அதன் பிறகு அந்த லாரி சாலையோர தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு 50 அடி ஆழ மலைச்சரிவில் பாய்ந்து மண்ணில் புதைந்து நின்றது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிரேன் இயந்திரம் மூலம் லாரி மீட்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.