லாரி பழுதாகி நின்றதால் பல மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்நிலையில் சாலையை கடக்கும் வனவிலங்குகள் விபத்தில் சிக்கி இறப்பதாக கூறி கடந்த 10-ஆம் தேதி முதல் மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணி வரை இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கிரானைட் பாரம் ஏற்றிக்கொண்டு மைசூரிலிருந்து சேலத்திற்கு புறப்பட்ட லாரி திம்பம் மலைப்பாதையில் 9-வது கொண்டை ஊசி வளைவில் பழுதாகி நின்றுவிட்டது. இதனால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் மூலம் பழுதான லாரியை அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் பல மணி நேரம் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.