மலைமாடு உரிமையாளரை தாக்கிய வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள முத்துகிருஷ்ணாபுரத்தில் ஜெமினி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவர் ஜெமினி வளர்க்கும் மலைமாடுகளை மேய்ச்சலுக்காக கொண்டு சென்றுள்ளார். அப்போது வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் மாடுகளை மேய விட்டதற்காக கருப்பையாவை பிடித்து வனத்துறையினர் சின்னமனூர் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதனையறிந்த ஜெமினி உடனடியாக வனச்சரக அலுவலகத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து வனத்துறை அதிகாரி ஒருவர் ஜெமினியை தாக்கி கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகின்றது. இதனைதொடர்ந்து உடனடியாக ஜெமினி உறவினர்கள் மற்றும், மலைமாடுகள் வளர்ப்போர் சங்கத்தினர் திரண்டு வந்து வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சின்னமனூர் காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அப்போது மலைமாடுகள் வளர்ப்பவர்களை தாகத முறையில் பேசி தாக்கிய வனத்துறை அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என கூறியுள்ளார். இதற்கு பின்னரே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றுள்ளனர்.