மலையாள இலக்கியத்தின் கிராண்ட் மதர் என அழைக்கப்படும் கவிஞர் பாலமணி அம்மாவின் 113வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கூகுள் நிறுவனம், அவரை கௌரவிக்கும் வகையில் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது. கடந்த 1909ம் வருடம் ஜூலை 19 அன்று திருச்சூர் மாவட்டத்தில் புன்னையூர் குளத்தில் நாலாபத்தில் பாலமணி அம்மா பிறந்தார். அவர் முறையாக கல்வி கற்காவிட்டாலும் தன் உறவினர் உதவியால் புத்தங்களைப் படித்து தன்னை வளர்த்துக் கொண்டார்.
அதன்பின் 19 வயதில் மலையாளப் பத்திரிகையான மாத்ரு பூமியின் நிர்வாக இயக்குநர் மற்றும் ஆசிரியர் வி.எம். நாயரை திருமணம் செய்துகொண்டார். சென்ற 1930 ஆம் வருடம் தன் 21 வயதில் தனது முதல் கவிதையை அவர் கூப்புகை என்ற தலைப்பில் வெளியிட்டார். பெண்களை குறித்தும் தாய்மையைப் பற்றியும் பல்வேறு கவிதைகளை வெளியிட்ட அவர் தாய்மையின் கவிஞர் என்று அறியப்பட்டார். அம்மா (1934), முத்தசி (1962) மற்றும் மழுவின்டே கதை (1966) போன்றவை அவரது மிகவும் பிரபலமான படைப்புகள் ஆகும்.
அத்துடன் தன் கவிதைகளுக்காக சரஸ்வதி சம்மான், பத்ம விபூஷண் என எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர் ஆவார். 20-க்கும் அதிகமான கவிதை, உரைநடை மற்றும் மொழி பெயர்ப்புத் தொகுப்புகளை வெளியிட்டார். பின் 1984-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட கமலாதாஸ் இவருடைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது. பின் 2004 செப்டம்பர் 29-ல் அவர் காலமானார்.