ஏலகிரி மலையில் மழைக்காலங்களில் சரிந்து விழுந்த பாறைகளை முழுமையாக அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ஏலகிரி மலை சுற்றுலா தளமாக இருக்கின்றது. இந்த மலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு பெய்த கனமழையால் ரோடுகளில் ஆங்காங்கே பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பை நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.
அதேபோல இரண்டாவது, ஆறாவது கொண்டை ஊசி வளைவு ரோடுகளில் பெரிய பாறை கற்கள் சரிந்து கிடந்ததால் ஒரு வழி பாதையாக வாகனங்கள் சென்று வந்துள்ளன. அதனை தொடர்ந்து பாறையை அப்புறப்படுத்த வெடி வைத்தனர். ஆனாலும் முழுமையாக அகற்ற முடியவில்லை. அந்தசமயத்தில் ஊரடங்கு நடைமுறையில் இருந்ததால் குறைவான வண்டிகள் சென்றதால் பாதிப்பு இல்லாமல் இருந்தது.
இச்சூழ்நிலையில் தற்போது அனைத்து வாகனங்களும் மலைக்கு மேலிருந்து கீழேயும், கீழிருந்து மேலேயும் செல்வதால் போக்குவரத்து பாதிக்கின்றது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆதலால் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் பாறைக் கற்களை முழுவதுமாக அப்புறப்படுத்த உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.